Breaking News

வரம்புக்கப்பால் போகாததே நல்லது..!


 இருவருக்கு மத்தியிலிருக்கும் மனக்கசப்புகளுக்கும், கோபதாபங்களுக்கும், வெறுப்புக்கும் பிரதான காரணமாக இருப்பது பெரும்பாலும் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த எதிர்பார்ப்புகளின் தோல்விநிலை தான்.


இந்த எதிர்பார்ப்புகள், வெளிப்படையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைவிட அவை வெளிப்படுத்தப்படாமல் மனத்தினுள்ளேயே மறைத்து வைக்கப்பட்டு, கடைசியில் மனத்தில் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கு மாற்றமாக மற்றவர்களது நடத்தை அமைகையில் தான் அது மனத்தினுள்ளே ஏகப்பட்ட எதிர்மறையான மற்றும் கெட்ட எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.


பொதுவாகவே பிறர்மீது எதிர்பார்ப்பு வைத்துத் தோல்வி கண்டவர்களது நிலையானது மேலே கூறியதுபோல 

எதிர்பார்ப்பை மனத்தினுள்ளேயே மறைத்து வைத்திருந்து கடைசியில் ஏமாறும் நிலையாகத்தானிருக்கிறது.


ஆனாலும்


பிறர் மீது நாம் வைக்கும் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுவதனால் சில வேளைகளில் அது அவர்களது செயற்சுதந்திரத்தை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியதுபோன்றாகியும் விடுகிறது.


காரணம்


அவ்வாறு நாம் நமது எதிர்பார்ப்புகளை அவர்களிடம் முன்வைக்கும்போது அவர்கள் அவர்களது விருப்பப்படி செயற்படுவதினூடாக எங்கு 'நமது' மனத்தை நோகடித்து விடுவோமேயென்று அச்சமடைகின்றனர்.

இதனால் அவர்கள்;

அவர்களது சுதந்திரத்தை இங்கு சிறையிலிட்டுவிட்டு நமது எதிர்பார்ப்புகளுக்கு

மனத்தே விருப்பமின்றி பாவமாக பலியாகின்றனர்.


இவ்வாறான நிலையானது நான் மேலே குறிப்பிட்ட எதிர்பார்பு வைத்தோரின் தோல்வி நிலையைவிட கவலைக்குறிய நிலையாகும்.


இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து முடிந்தளவு நாம் தப்பித்து பிறரையும் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டுமெனில் 

நாம் எப்போதும் மற்றவர்கள் விடயத்தில் அவர்களது செயற்சுதந்திர வரம்பைத்தாண்டி அத்துமீறி அவர்களது முடிவுகளுக்குள்ளே நுழையக்கூடாது.


அவர்களது சுதந்திரத்தை நமது விருப்பங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் நிரப்பிவிட முயற்சிக்கக்கூடாது.


நம் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களில் நமது எதிர்பார்ப்புகள் மேலோங்க வேண்டுமென நப்பாசைகொள்ளாது பிறர் விடயத்தில் பொறுமைகொள்ள வேண்டும்.


எவ்வாறாயினும்

பிறரது  சில நடத்தைகள், முடிவுகள் சிலசமயம் தவறாயிருக்க; 

அதை நாம் தெரிந்துகொண்டிருந்தும் கூட அதற்கெதிராக பேசாமல் மௌனித்திருப்பது மிகத்தவறான செயலாகும்.


நம் கண்முன்னே யாராவது ஈடுபடும் தவறான செயல்களை

அது அவரது சுதந்திரமென்று இருந்துவிடாமல் அங்கு வரம்பைத் தாண்டிப்போயாவது தடுக்க முடியுமான வேலையை செய்ய வேண்டும்.


எது எப்படியோ..


எல்லை தாண்டிய எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தால் அனைவருடனும் உளத்திருப்தியோடு ஒற்றுமையாக இருக்க முடியும்.


எப்பொழுதும் நாம் பிறரது சூழ்நிலைகளையும்,

மனோநிலைகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.


அப்போது தான் நாம்

பிறரது சுதந்திரத்தில் அத்துமீறிடாமல் அவர்களுடன் உண்மையாக அன்பு பாராட்ட முடியும்.


எதிர்பார்ப்புகள்,எல்லை மீறினால் :

ஏமாற்றங்கள், ஏறி மிதிக்கும்.


Muhammadh FirNas

No comments