Breaking News

பரீட்சையில் தோற்றுப் போனதாய் நினைப்போருக்கு...


 


எனது A/L பரீட்சையில் அடுத்தடுத்து இருமுறை தோற்றுப் போனேன். 2 தடவையும் ஒரு B யும்ஒரு S உம்தான் பெறுபேறு.  2 பாடங்கள்தான் பாஸ்; மற்ற  பாடம் ஃபெயில்.


 வகுப்பில் சுறுசுறுப்புடன் கெட்டித்தனமாக இருப்பேன்.O/L  இல் மிகச்சிறந்த பெறுபேறு  எடுத்தேன். (அப்போது D தான் - Distinction Pass. 4D 4C

A அல்ல அப்போது B யெல்லாம் இருக்கவில்லை). இதனால் கெட்டிக்காரன் என்று பேரெடுத்திருந்தேன்.


ஆனால், A/L இல் படுதோல்வி. எனது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு தோல்வி அது.


என்னை டொக்டராகக் கனவு கண்ட பலர் இருந்தார்கள். அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னை நோக்கி கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்கள்; என்னை அவமானப்படுத்தினார்கள். 


கடந்து செல்வதற்கு மிகவுமே  கடினமான நாட்களாக அவை இருந்தன. பெரும் பாரமாக இருந்தது.என் தந்தையை மட்டுமே எனக்கு ஓரளவு ஆறுதலாய் உணர்ந்தேன்.

இதனால், அப்போது என்னைச் சுற்றியிருந்த சமூகத்தை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன்.


அந்த நாட்களில் மனிதர்களை எதிர்கொள்வதே பெரும் பாடாக இருந்தது. அதிலிருந்து வெளியேற சில நாட்கள் தேவைப்பட்டன. 

படிப்படியாக விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகினேன்.


இங்கிருக்கும் சமூக மதிப்பீடுகள், டொக்டரையும் எஞ்ஜினியரையும் மட்டுமே அந்தஸ்த்தில் உயர்வாகக் கருதுவன.


என் மீதும் அதே மதிப்பீடுகளைத் திணிக்க முற்பட்டார்கள். நான் ஒரு சமூகப் பிராணி. மருத்துவம் எனது தெரிவோ துறையோ அல்ல. நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது என் இயல்பும் அல்ல.


உயிரியற்பிரிவில் டியுசனின்றி படிப்பா?மீண்டும் மண்டும் அதற்காக செலவு செய்ய என் தந்தையால் இயலாதென அவர் சொல்லவில்லை.படியென்றே அவர் சொன்னாலும் படிக்க என்னால் முடியாதெனவும் என் தந்தையால் அதற்கான செலவினை ஈடுசெய்ய சிரமமென்பதையும்நானுணர்ந்தேன். பரந்த பூமியை நோக்கி என் இறக்கைகளை விரிக்கத் தொடங்கினேன்.

தொழிலொன்றில் நிலைத்து அதில் ஆறுதல் பெற முனைந்தேன்.பல்தேசியக்கம்பனியொன்றில் பதவியொன்றைப்பெற்றேன்.படிப்பாகும் நாம் கருதும் தாள்த்துண்டுக்கில்லாத மதிப்பு ஆற்றலுக்கு அங்குண்டு.பல்கலை ஒன்றினிலே சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் டிப்ளோமா கற்க என்னாலும் இயலுமாம் அறிந்தேன்.வார இறுதி விரிவுரைகளில் எனை அதிலே நிலைக்கச்செய்தேன்.

தொழில் செய்துகொண்டே நான் டிப்ளோமா நிறைவுசெய்தேன்.

ஏஎல்லில் தோற்ற காயம் ஒருவாறு காய்ந்து போனது.

உழைத்தேன்.வீட்டிலிருந்து பணம் பெறவே மாட்டேன் உறுதியும் நான் பூண்டேன்.டிப்ளமா பெற்ற நாள் என் தந்தை முன்னாலே பட்டம்பெற்ற மகிழ்ச்சி கண்டேன்.தொடர்ந்து வேலை.தனியார் துறையினிலே  திறமைக்கு உண்டிடமே!

கம்பனிகள் மாறி மாறி பல பதவிகள் வகித்து நான் ஏஎல்லில் தோற்று வந்த புண்ணை நான் ஆற்றிவிட்டேன்.பெற்றிட்ட டிப்ளோமாவால்

பட்டமதை மறந்தே நான் இருந்திட்டேன்.  கம்பனிகள் மாறி மாறி மிகப் பெரியவொரு கம்பனியில் நிறைவேற்று அதிகாரியாய் டொலராக உழைக்கத்தொடங்கி சில காலம் தான் போயிருக்கும். ஏற்கனவே என் தகமைக்கு பொருந்துவதாய் ஒரு  பதவிக்கு அரச துறைக்கும் விண்ணப்பித்து போட்டிப்பரீட்சை எழுதி நானும் முழு நாட்டிலேயே ஒன்பதாவதாய்த் தேறியதால் அரச துறைக்குள் பிரவேசித்தேன். ஏஎல்லில்தோற்ற புண்ணின் தழும்பின்னும் இருக்கிறதே.


எனக்குப் பிடிக்காத தெரிவை உதறித் தள்ளிவிட்டு, மூன்றாவது தடவை கலைத் துறையைத் தெரிவு செய்தேன்- அதுவும் கடைசி நேரத்தில்.


இந்த முடிவை எடுப்பதற்கு - எனது துறையை மாற்றுவதற்கு - காலம் எடுத்தது நிறைய எனக்கு.லாயக்கில்லா நானோ என நினைக்குமளவு மூன்றாம் தடவையும் எனக்குமிகப்பிடித்த துறையெனினும் பாடமொன்ற வகையினிலே தோற்றுப்போனேன் அப்பாடத்திலே.படிக்கலையே நியாயம்தான்.

நொந்துதானே போகவேண்டும்

  அதை ஒருபோதும் நான் இழப்பாகப் பார்க்கவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை 

பாடசாலை வாசமிழந்து14 வருடங்கள்.இனியெங்கே நாமென்று யோசிக்கையிலே துளிர் விட்டது.மொழி மூலத்தை மாற்றிவிட

எல்லாமே இறைதந்த நம்பிக்கையின்  விளைவுகளே. சிங்களத்தில் எனக்கு பரிச்சயந்தான் என்றிருந்தேன்.எனக்குப்பிடித்த துறைதானே ஊடகமும் தொடர்பாடலும்.கடந்தகால வினாக்களை நான் சில நாட்கள் நுனிப்புல் மேய்ந்தேன்.இயலும்போல் இருந்திடவே.விண்ணப்பித்தேன் சிங்கள மொழிமூலம் மட்டுமல்ல முதல்மொழிசிங்களம் எனும் பாடத்தையும்.நண்பர்களும்தமிழ் டீச்சர் என் மனைவியும் எனக்கு த் தந்த உற்சாகம் இறைதுணையால் வென்றிட்டேன்.

ஒருநிமிடம் ஒரு வகுப்பிலும் உட்காந்து கற்காமல்

 ABS பெற்றிட்டேன்.

சிங்களமொழி பாடத்திலே A பெற்றது குளிருதானே.

அலுவலகத்திற் பெற்றிட்ட பாராட்டுக்கள் இன்னும் நானும்  மறக்கல்லயே.

பட்டமொன்று பெற்றிட எனக்கிருந்த வேட்கையது அதுவாக அதிகரிக்க,பல பெயர் கொண்டு எங்களூரிலும் பல்கலைகள் நிறுவியவர்கள் ஆயிரங்கள் பல பெற்று கேட்கும் பட்டம் தருவோமெனச் சொன்னாலும் நியாயமற்ற இச்செயலை நான் வெறுத்தேன். சிரமப்பட்டு கற்றெடுக்கும் பட்டதாரிகள் பாவமன்றோ எனக்கு நன்கே பிடித்திருந்த ஊடகத்துறை சார்ந்ததாக உள்நாட்டுப் பல்கலைக்கழகத்திலே நான் சிங்கள மொழிமூலத்திலேயே "கற்று" நானும்  'முதற்' தரத்தில் சித்தியெய்தினேன்.

அந்த மகழ்ச்சினைப்பகிர்ந்து கொள்ள என் தந்தை 

இன்றில்லை உயிருடனே அதுமட்டுமே என் இழப்பு

இறைவனுக்கே புகழனைத்தும்.


ஆதலால், இந்தப் பரீட்சைப் பெறுபேறு வரும்போதெல்லாம், தோற்றுப் போனவர்களை அவமானப்படுத்தி விடாதீர்கள்; அன்பான- ஆறுதல் நிறைந்த வார்த்தைகளால், கனிவான பார்வையால் வாரி அணையுங்கள். 

நல்ல பெறுபேறு அமையாதோருக்கு:

 

பரீட்சைத் தோல்வி, தோல்வியே அல்ல. வாழ்க்கைப்பாதை மிகவுமே  

சிலபோது அவமானம், ஆற்றாமை உணர்வுகள் குறுக்கறுக்கும். துவண்டு விடாதீர்கள். இறைவனின் ஏற்பாடு வேறாய் இருக்கும்.


இந்த நாட்கள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். தைரியமாக இருங்கள். துவண்டு விடாதீர்கள். பொறுமையாகக் கடந்து விடுங்கள். கவலைகளைப் போக்க நண்பர்களோடும்  நெருங்கியவர்களோடும் உரையாடுங்கள். முடிந்தால் வெறொரு சூழலுக்கு மாறி விடுங்கள்(சிறிய தொழில் முயற்சி ஒன்று போல). 

ஒரு பயணம் செல்லுங்கள். அது மனதிற்கு அமைதி தரும்.


உலகத்திற்கு எல்லா வகையான மனிதர்களும் தேவை. நாம் இந்த உலகத்திற்கு நிச்சயம் வேண்டப்பட்ட மனிதர்கள். 


பரீட்சையில் நல்ல பெறுபேறு பெற்றவர்களுக்கு:

உங்களது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த அடைவிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். 


எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் அமையட்டும்.
✍️ ஹொரொவ்பொத்தான அ இ( 2023.09.04)

No comments