ஊடு இல்லாம என்ன கலியாணம்?"
உம்மா சொன்ன வார்த்தைகள் அவன் உள்ளத்தை சிதைத்தது. நான்கு வருடங்கள் அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கண் முன்னே வந்து போனது. கண்களில் கண்ணீர் சுரந்து கன்னம் வழியாக ஓடுவதை அறியாது அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான் சமீர்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இருபத்தியொரு வயதில் கட்டாருக்கு சென்றவன் ஊருக்கு வந்து மூன்றே மூன்று நாட்கள். உண்மையாய் ஒருத்தியை காதலித்திருந்தான், தைரியமாகவே அப்போது தான் காதலிப்பவளின் தந்தையிடம் சென்று தான் உங்கள் மகளைத் திருமணம் முடிக்கப்போகிறேன் என்று கேட்டவனிடம் அந்தப் பெண்ணின் தந்தை...
"எங்குட புள்ளக்கி குடுக்குறதுக்கு ஒண்டுமில்ல, நாங்க வசதியில்லாத ஆக்கள், ஒங்களுக்கிட்ட தொழில் இரிக்கா? புள்ளய கொண்டுபோய் வெக்கிறதுக்கு ஊடு வளவு இரிக்கா?" என்று கேட்ட அந்தக் கேள்விகளே நான்கு வருடங்கள் அவனுக்கு கட்டாரை சொந்தமாக்கியது. தான் காதலித்தவளை கரம்பிடித்து சந்தோசமாய் வாழவேண்டும் என்பதற்காக கட்டார் சென்று மிகுந்த கஷ்டப்பட்டு குடும்பத்தையும் கவனித்து நிலம் வாங்கி அழகிய வீடொன்றும் கட்டி முடித்து இப்போது ஊருக்கு வந்திருந்தான்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழானது. தன் தங்கைக்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் நடந்திருந்தன. இன்னும் நான்கு நாட்களில் திருமணம். தனது தங்கைக்கு படித்த அரச உத்தியோகம் செய்யும் மாப்பிள்ளையையே குடும்பத்தினர் பேசி முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சமீரின் மொத்த வாழ்வையும் சீரழித்ததாக உணர்ந்தான் அவன்.
ஆம் தனது தங்கைக்கு பேசிய மாப்பிள்ளையின் வாப்பா இப்போது திடீரென சமீர் தனக்கு கட்டிய புது வீட்டினை மாப்பிள்ளைக்கு சீதனமாக தருமாறு கேட்டிருந்தார். இத்தனைக்கும் இரண்டு நாட்களில் திருமணம், மொத்த உறவுகளுக்கும் சொல்லிவிட்டார்கள். திருமண வேலைகளில் பிசியாய் இருந்து பின்னிரவில் வீடு வந்துசேர்ந்த சமீரிடம் உம்மா இந்த விடயத்தினை சொன்னதும் அவன் உருக்குலைந்து போனான்.
"என்ன மனெ செய்ற? இப்புடி கேப்பாங்க எண்டு நெனைக்கலயே நாம, காக்காமார் தங்கச்சிக்கி ஊடு கட்டிக் குடுக்குறது ஊர்ல வழமதானே. அதான் அவியலும் கேக்காங்க. நீ ஒழைச்சி ஒனக்கு ன்னோரு ஊடு கட்டுமன. இரிக்கிறத்த குடுத்து எப்பிடியாலும் தங்கச்சிய கரையேத்துவம், அல்லாஹ் ஒனக்கு சொர்க்கலோகத்த தருவான்" என்று சமீரின் தலையைத் தடவியபடியே சொன்னாள் அந்த பாமரத் தாய்.
தாங்கள் இவ்வளவு காலமும் வசித்தது பாழடைந்து போன ஒரு பழையவீட்டில். அந்த வீட்டினை உடைத்து பின்னர் அதில் தங்கைக்கு ஒரு வீட்டினை கட்டிக்கொடுக்கலாம் என்று அப்போதே அவன் கனவு கண்டிருந்தான். இந்த மாப்புள்ளை இப்படி வீடு வாசல் கேட்பார் என்று அவனோ அவனது குடும்பமோ கனவிலும் நினைக்கவில்லை. எதுவுமே வேண்டாம் என்றுதான் மாப்பிள்ளை சொன்னார். ஆனால் அவரின் தகப்பனார் இப்போது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, வீடு தராமல் திருமணம் முடிக்க கூடாது என்று நிர்ப்பந்தமாகவே சொல்லிவிட்டார்.
எத்தனை கனவுக் கோட்டைகளுடன் கட்டிய வீடு இது. தான் காதலித்தவள் தனக்காக, தன்னை திருமணம் முடிக்க நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்தாள். இன்று அவளிடம் என்ன சொல்வது? நான்கு வருடங்கள் தான் உழைத்த உழைப்பு எதிர்காலம் அனைத்துமே இன்று இன்னொருவருக்கு கொடுக்கவேண்டியதா? அப்படியானால் தனது திருமணத்தைப் பற்றி அந்தப் பெண்ணின் தகப்பனிடம் எப்படி பேசுவேன் என்ன பேசுவேன்? என்னிடம் இப்போது என்ன உள்ளது அந்தப் பெண்ணைத் திருமணம் முடிக்க?
விடையில்லா பல கேள்விகளுடன் நீண்டமணிநேரம் சிந்தித்தவாறே சோபாவில் உறங்கிவிட்டான் சமீர்.
அதிகாலை ஐந்தரை மணிக்கு அலறிய தொலைபேசியின் சத்தத்தில் கண் விழித்து "ஹலோ" என்றான். மறுபக்கம் அவன் காதலி "என்ன இன்னமும் படுக்கயலா? இண்டைக்கி வாப்பாகிட்ட பேசவாற எண்டலா? என்னேரம் வாற மணி?" என்றாள்.
"ஓம், நான் பகலைக்கி வாறன் வாப்பாகிட்ட பேசுவம். இன்ஷாஅல்லாஹ்" நெஞ்சைப் பற்றிப் பிடித்தவனாக பதில் சொன்னான். "சுவரா வார தானே? பயப்புடாம வந்து கதைங்கோ, இப்ப எல்லாம் சரியாத்தானே இரிக்கி. ஊடும் இரிக்கித் தானே, தங்கச்சிர கலியாணம் முடிய நம்முட கலியாணத்த பன்னுர மாதிரி கேளுங்கோ" என்று ஆசையாக பேசியவளிடம் "ஓம் ஓம் நான் வந்து பேசுறன்" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
தீர்மானம் எடுப்பதில் தடுமாறிப் போனான். அவனால் மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை. தனது திருமணத்திற்காக தங்கையின் திருமணத்தில் அவனால் கைவைக்க முடியாது. தங்கைமீதும் குடும்பத்தின்மீதும் அவ்வளவு நேசம் கொண்டவன் அவன். அதற்காக தன் காதலையும் தியாகம் செய்ய முடியாது. காலை பதினொரு மணியிருக்கும் பொறுமை காக்க முடியாதவன் உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சப்னாவின் வீட்டிற்கு சென்றான்.
"ஓம் வாங்கோ உள்ளுக்கு" என்றார் சப்னாவின் வாப்பா.
உள்ளே சென்று கதிரையில் அமர்ந்தான். "வந்து கனநாளா? பயணம் எல்லாம் எப்பிடி? நல்லா இரிக்கயல் தானே" என்ற சப்னாவின் வாப்பாவிடம் ஓமென்று தலையை ஆட்டியவன் "ஒங்களுக்கிட்ட கொஞ்சம் பேசத்தான் அவுசரமா வந்த" என்றான். "ஓம் செல்லுங்கோ" என்ற சப்னாவின் வாப்பாவிடம்..
"இவ்வளவு நாளும் ஒழைச்சத ஊடு கட்டின. இப்ப தங்கச்சிக்கி கலியாணம் பேசி திடீர் எண்டாப்பொல அந்த ஊட்ட தங்கச்சிற மாமனார் ஆக்கள் தங்கச்சிக்கி கேக்காங்க. உம்மாவும் தங்கச்சிற கலியாணம் அலையப்பொடா எண்டுப்பொட்டு அவக்கு ஊட்ட குடுக்கட்டாம் எண்டு செல்லுறா. ஆனா நான் கட்டின ஊடு எனக்கிம் சப்னாக்கும்தான். கலியாணத்த முடிப்பம் எண்டுதான் வந்த. இப்ப என்ன செய்ற எண்டு வெளங்கல்ல. அதான் ஒங்களுக்கிட்ட பேசுவமெண்டு வந்த" என்று ஒரே மூச்சில் நடுங்கியபடி சொல்லி முடித்தவன் அப்போதுதான் திரும்பினான் கதவுக்கு பின்னே நின்று அனைத்தையும் ஆவலாக கேட்டுக்கொண்டிருக்கும் சப்னாவை.
"அது என்ன எண்டாலும் பொம்புள புள்ளக்கி ஊடு கேப்பாங்க. அதுக்கு ஒண்டும் செய்ய ஏலா. கலியாணம் எண்டா அப்பிடித்தான். எனக்கிம் மகளுக்கு ஊடு கட்ட வசதி இல்ல. மூனும் பொம்புள புள்ளயல். அதுக்குத்தான் அன்னேரமே சென்ன ஊடு ஒண்டயாலும் கட்டிப்பொட்டு வாங்கோ எண்டு. ஆரு எண்டாலும் நம்முட பொம்புள புள்ள நல்லா இரிக்கனும் எண்டுதானே பாப்பாங்க"
"ஓம் நீங்க செல்ற சரிதான், இருந்தாலும் நான் ஊடு கட்டுவன். பழய ஊடு இரிக்கிற எடத்துல பழச ஒடைச்சிப்பொட்டு கட்டுவன். நம்பிக்கை வெச்சி நீங்க ஓம் எண்டா நான் வந்த கையோட கலியாணத்தயும் முடிக்கத்தான் யோசிக்கன்" என்றவனிடம்..
"இல்ல மகன், என்ன இருந்தாலும் புள்ளட வாழ்க்கை முக்கியம் எங்களுக்கு. நீங்க இன்னா இருந்ததயும் ஒங்குட புள்ளக்கி குடுத்துப்பொட்டு வந்தா எங்குட புள்ள எங்க இரிக்கிற? ஊடு இல்லாம என்ன கலியாணம்?"
"எப்புடியும் ரெண்டு வருசத்துக்குள்ள ஊடு ஒண்டு கட்டிருவன், அல்லாஹ்க்காக நெலைமைய கொஞ்சம் வெளங்குங்கோ ப்ளீஸ்"
"ச்சே ச்சே அப்புடி எல்லாம் சரி வராது. என்ட புள்ளட வாழ்க்கை எனக்கு முக்கியம். புள்ளக்கி வயசி போகுது. ஆறு மாசத்துக்குள்ள ஒங்களால ஊடு கட்ட ஏலுமெண்டா கட்டிப்பொட்டு வாங்கோ, நானே பன்னித்தாறன். அதுக்கு மேலயும் என்ட புள்ளய வெச்சிக்கி பாத்துக்கு இரிக்க ஏலா, மன்னிச்சுக்கோங்க" என்று சொல்லிவிட்டு எழும்பி சென்றுவிட்டார்.
முகம் காய்ந்து போனான். மொத்த வாழ்க்கையையும் தொலைத்தவன் போல எழும்பி வெளியில் சென்றான். வீட்டை வந்தடைந்ததும் உம்மாவை கூப்பிட்டு "உம்மா, அந்த ஊட்ட தங்கச்சிக்கி குடுங்கோ" என்றான். உம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய வந்து அவனை அனைத்து முத்தமிட்டு நீ எண்ட புள்ள என்றார்.
"உம்மா இன்னொரு விசயம் செல்றன், என்ன கோவிக்கனாம், எனக்கி தங்கச்சிற வாழ்க்கை முக்கியம், அதான் ஊட்ட தங்கச்சிக்கி குடுக்கன். அதுபோல என்ன நம்பி வந்த ஒரு புள்ள இரிக்கிமா, நாலு வருசமா அந்தப் புள்ள எனக்காக காத்திருக்கு. பாவம் அவளுக்கும் வயசி போகுதும்மா. நான் நாளைக்கி கட்டார் போக டிக்கட் போட்டுட்டன்மா. ஆறு மாசத்துக்குள்ள எண்ட ரத்தத்த வித்தாலும் என்ன நம்பி வந்த புள்ளயை நான் முடிக்கனும் மா. தங்கச்சிர கலியாணத்த நல்ல படியா முடிங்கோம்மா, கலியாணத்துக்கு நான் இரிக்கல்ல மா. இனி இரிக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கி முக்கியம் மா, நான் இன்டைக்கி கொழும்புக்கு போறன் மா." என்றான்.
உம்மாவின் முகம் விறைத்துப்போனது. உள்ளே இருந்த தங்கை ஓடிவந்து சமீரை கட்டிப்பிடித்து அழுதாள். உம்மாவும் சேர்ந்து வீடே அன்று குழுங்கிக் குழுங்கி அழுதார்கள். ஆனால் சமீரின் மனவேதனையை யாருடைய இதயமும் ஈடு செய்யவில்லை. வந்து நான்கு நாட்களில் மீண்டும் சமீர் பாலைவன நாட்டுக்கு பயணமானான். சப்னாவிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்பதும் அவன் இதயத்தை இன்னும் வாட்டியது. வீடே மரண வீடாய் இருந்தது.
அடுத்த நாள் விமான நிலையத்தில் விமானத்திற்குள் ஏறியதும் தொலைபேசியை ஓப் செய்ய எடுத்தவன் அங்கே சப்னாவின் இலக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்து கிடப்பதை கண்டு மெசேஜை பார்த்தான்.
"Onnula enakki nambikka irikki. Innam 6 maasam ille, 6 warusam endaalum onakkaka kaathiruppen. Fe amanillaah" என்று அனுப்பப்பட்டிருந்தது. பறந்து கொண்டிருந்த விமானத்தின் கீழே பரந்து கிடக்கும் கடல் நீரை விடவும் அதிகமாக அவன் கண்கள் நீரைக்கொட்டியது.
முற்றும்!
No comments