ஒரு காலம் இருந்தது...
ஒரு காலம் இருந்தது
மாலையானால்
மளமளவெனக் குளித்து
குர்ஆன் ஓதி
புத்தகம் படித்து
நட்சத்திரங்களென ஆனந்தித்த
ஒரு காலம் இருந்தது
ஒரு காலம் இருந்தது
எவ்வளவு தூரமென்றாலும்
வீட்டிலிருந்து பள்ளிக்கு
விறுவிறுவென நடந்தே சென்ற
ஒரு காலம் இருந்தது
ஒரு காலம் இருந்தது
பாடசாலை வளவெல்லாம் கூட்டிப் பெருக்கி
பூவாளியால் மகிழ்ந்தே நீரூற்றி மலர்ந்த ஒரு காலம் இருந்தது
ஆசிரியர் எள்ளென்றால்
எண்ணெயாய் நின்ற ஒரு காலம் இருந்தது
ஆசான்களை முந்தாமல்
பின்னிப் பின்னி நடை தயங்கிய
ஒரு காலம் இருந்தது
பரீட்சை மண்டபங்களில்
பகிரப்படும் வினாத்தாளை
எழுந்து வாங்கி அமர்ந்த
ஒரு காலம் இருந்தது
ஆசிரியரிடம் கொடுக்கையில்
இரு கைகளால் நீட்டி
பணிவாய்க் கொடுத்த ஒரு காலம் இருந்தது
ஒரு காலம் இருந்தது
ஆசிரியர் தண்டனைகள்
ஆரோக்கியமென
பெற்றோர் பொருந்திக் கொண்ட
ஒரு காலம் இருந்தது
பள்ளிப் படிப்பே பல்கலைக் கழகத்தைத் தீர்மானித்த ஒரு காலம் இருந்தது
அப்போதுகளில்
நிலவும் காற்றும் நிசப்தமாயும்
நெஞ்சுக் குழிகள்
நிரப்பமாயும் இருந்தன
கொடுப்பதை உண்டு
கொடுத்ததை உடுத்து
மரங்களில் தாவி
மாலையானவுடன் வீடடைந்த
ஒரு காலம் இருந்தது
இன்றும்
எவர்க்கும் இருக்கிறது
அதேயளவு காலம்
றியாஸா எம் ஸவாஹிர்
No comments