Breaking News

விதியை மாற்றி அமை!!!

 


ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.


அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.


அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.


நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றியும் அமைக்கலாம்.


செய் அல்லது செத்துமடி!!!


ஒரு முறை ஹகுயன் என்கின்ற ஜென் துறவி அவரது சிஷ்யர்களிடம் "ஒருவன் கடினமான செயல்களை சுலபமாக செய்வது எப்படி?" என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதனை விளக்குவதற்காக ஒரு கதையை கூறினார். அது என்னவென்றால் "ஒரு திருடனின் மகன் அவன் தந்தையிடம் தனக்கும் திருடுவதில் உள்ள ரகசியங்களை கற்று தர கேட்டான். அவனுடைய தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டு அன்று இரவு ஒரு பெரிய மாளிகைக்கு திருடுவதற்காக அவனை அழைத்து சென்றான்.


அந்த வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கையில், திருடன் அவன் மகனை துணிகள் நிறைந்த அறைக்குள் அழைத்து சென்றான். மகனிடம் அங்குள்ள துணிகளை திருட சொன்னான். அவனுடைய மகனும் தந்தையின் சொல் படி திருடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனின் தந்தை மெதுவாக அறையின் வெளியே வந்து, பின் அவனை உள்ளே வைத்து பூட்டினான். பின்பு வீட்டில் உள்ளோரை எழுப்புவதற்காக, அந்த வீட்டின் வெளிப்புறம் வந்து கதவை தட்டிவிட்டு, வேகமாக தப்பி வீட்டிற்கு ஓடிவிட்டான்.


சிறிது நேரம் கழித்து, அவனது மகனும் வீடு திரும்பினான். பிறகு அழுது கொண்டே அவனுடைய தந்தையிடம் "அப்பா ஏன் அப்படி செய்தீர்கள்? நான் எதையும் திருடவில்லை, தப்பிப்பதற்கு என்ன வழி என்று என் புத்தி கூர்மையை செயல்படுத்துவதிலேயே நேரம் அனைத்தும் போயிற்று" என்று கதறி அழுதான். அவனது தந்தையும் சிரித்து கொண்டே "மகனே, நீ கொள்ளை கலையில் முதல் பாடத்தை கற்று கொண்டாய்" என்று கூறினான் என்று சொல்லி முடித்தார்.


பிறகு சிஷ்யர்களிடம் இதைத் தான் மடிவது அல்லது நீந்துவது என்ற முறை என்பர். மேலும் "பயம் கொண்ட நிலையில், எவரொருவரும் செய்ய முடியாத காரியங்களையும் அவர்கள் தங்கள் வலிமை கொண்டு செய்து முடிப்பர். ஒருவரின் சொந்த அனுபவத்தினால் மட்டுமே எந்த ஒரு கடினமான செயலையும் எளிதில் செய்ய கற்று கொள்வது என்பது சாத்தியம்" என்று சொல்லி உணர்த்தினார்.

No comments