கர்வம் வேண்டாம் மனிதா!...
கர்வமுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து மற்றவர்களை குறைத்து பார்ப்பது தான் கர்வத்தின் முதல் வேலை.
மனிதனுடைய வளர்ச்சிப் படியில் கர்வம் கால் நீட்டி படுத்திருக்கும்.இது தான் கடைசி படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாற துவங்கும் போது, வெற்றியின் கதவுகள் துருபிடிக்க ஆரம்பித்து விடும்.
கர்வம் மனிதர்களின் வேகக் கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்கு தெரியாத ஆயுதமே!
"எனக்கு எல்லாம் தெரியும்"என்பது கர்வ கிரீடத்தின் குரல்.ஆழ்மனதின் ஆழங்களை எட்டிப் பார்த்தால் விலாசம் தெரியும்.
"நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.
பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கி விடும்.
மரியாதையை எதிர்ப்பார்க்கும் மனமோ பிறரை மரியாதை செய்ய மறுத்து விடும் என்பது தான் இன்றைய உலகின் நிதர்சனமான உண்மை.
"நான் எல்லோரையும் விட பெரியவன்" என்று கர்வம் தன் காலரை தூக்கி விட்டு கொள்ளும்.
தனது வெற்றிக் கொடியை வேற்று கிரகத்தில் நாட்டி விட நாட்டம் கொள்ளும்.
ஆனால்,அடுத்தவனை விட நான் பெரியவன் என்ற சிந்தனையே அவன் மனதில் இருந்து ஒட்டுமொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.
இதோ என் சாதனைப் பட்டியல் என்று வெற்றிப்பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமத்தி திரியும்.தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கு அப்பால் நாடு கடத்தும்.
எனவே, கர்வத்தை கழற்றி எறிந்துவிட்டு சக மனிதர்களோடு கலந்து வாழும் ஆனந்த வாழ்க்கையின் திசை நோக்கி பயணத்தை மேற்கொள்ளுங்கள் மனிதர்களே!....
No comments