உயிரோடு ஓர் மரணம்!!!
நட்பெனும் பூவுலகதில்
உயிரினதும் உணர்வினதும் சேர்கையாய் தோழனெனும் உறவாய் நீ உதித்த அந் நாளின் அழகிய நினைவுகள் கூட இன்றேனோ இதயத்தை தீயாய் தீண்டி இமையோரத்தை விழிநீரால் நனைக்கிறது!!!
நீளும் நம் நட்பில் உயிரிருந்தும் ஏனடா உணர்வுகள் ஊமையாகின்றன...
நம் நட்பின் அன்றைய அழகிய நிஜங்கள் யாவும் இன்றைய நினைவுகளானதும்
அன்பின் சுவாரஷ்யங்கள் நம்முள் இழக்கப்பட்டதேனோ
அதற்கும் உன் வாழ்வில் புது வரவுகளின் வருகைதான் காரணமானதுவோ....
என் உயிரென்று உன்னை அழைக்க வேண்டும் போல் இருக்கின்றது ...
நீ என் இணை பிரியா தோழனென இலக்கணம் வகுக்க வேண்டும் போல் இருக்கின்றது ...
உன் நட்பின் நினைவின் துவக்கத்துடனான என் நட்பு நாளேடு முழுதும் இனியும் உனக்கே சொந்தம் என உரக்கச் சொல்ல வேண்டும் போல் இருக்கின்றது...
என்றாலும் நீ எனக்களித்த நட்பின் உரிமையை மீட்டெடுத்த பின் எப்படிச் சொல்வேனடா இவை யாவும் நிஜமென...
உடன் பிறப்புக்கள் தவிர்த்து வதனம் நோக்கிய முதல் ஆண்மை வதனம் உன்னுடையது காரணமின்றி எழுந்த உன் மீதான நம்பிக்கை இன்றும் களங்கப்படுத்தப்படவில்லை ...
உன்னுடனான முதல் சந்திப்பு அன்று உணர்த்தவில்லை பின்னாளில் என் பேனா முனையில் இருந்து வழியும் ஒரு துளி மை கூட உன் நட்பிற்கு மாத்திரம் தான் சொந்தம் என்பதை...
பின் ஒரு நாள் தொலைதூரக் கல்வியின் தேடலில் நீ தொலை தூரம் சென்றாலும் உன் அழைப்பிற்காக உறங்காமல் விழித்திருந்த நாட்களும் எத்தனை அழகடா விடியற் காலையில் உன் குரலோசையில் விழி திறந்த நொடிகளும் அத்தனை சுகமடா...
அன்று அத்தனை சுகம் கண்ட இதயமது நம் நட்பின் விரிசல்களால் இன்று வலியோடு துடிக்கிறதே...
உன் நட்பின் விரிசல்களால் நான் உயிரோடு மரணித்து விட்டேனடா இனி நம் நட்பின் அழகிய நினைவுகளாவது ஊமையாய் இவ் வையகத்தில் வாழ்ந்து விடட்டும் உரிமையோடு....
✍🏻:எச் பாஸியா இம்தியாஸ்...
பேருவளை
No comments