நானல்ல அவள்...!
அவளுக்கென்ன???
சிரித்துக் கொண்டே
இருக்கின்றாள் என்கின்றார்கள்...
யாருமறியா நடு நிசியில்
ஸுஜூதில் சிரம் தாழ்த்தி
இறைவனிடம் கதறி அழுத
பொழுதுகள் அவர்களுக்கு
தெரியாது....
அவளுக்கென்ன???
வென்று கொண்டே
இருக்கின்றாள் என்கின்றார்கள்...
எட்ட எட்ட தோல்விகளே முதுகை
குத்திக் குத்திப் பதம் பார்க்க
பதறிப் போய் தனித்திருத்த
நொடிகள் அவர்களுக்கு
தெரியாது....
அவளுக்கென்ன???
நிம்மதியாய் இருக்கின்றாள்
என்கின்றார்கள்...
துரோகத்தின் முட்களது
மீண்டும் மீண்டும் நெஞ்சை
கிழித்துப் பிளக்க துடி துடித்து
அழுத கணங்கள் அவர்களுக்கு
தெரியாது....
அவளுக்கென்ன???
நினைத்ததெல்லாம் கிடைக்கின்றது
என்கின்றார்கள்...
நினைத்ததெல்லாம் கண்களை
நனைத்து அவளை விட்டும் நழுவிச் சென்று மனதை
சிதைத்த நிமிடங்கள் அவர்களுக்கு
தெரியாது...
அவளுக்கென்ன???
அனைவரும் மதிக்கின்றார்கள்
என்கின்றார்கள்....
பல ஏளனப் பார்வைகளும்;
நக்கல் சிரிப்புகளும்;
அவளை புடை சூழ அவள்
தலைகுனிந்து கூனிக்குறுகிய
நாட்கள் அவர்களுக்குத்
தெரியாது...
அவளுக்கென்ன???
வாழ்கின்றாள் என்கின்றார்கள்...
உயிர் மட்டும் எஞ்சியிருக்க
உணர்வுகளனைத்தும் பறிக்கப்பட்டு உயிரிருந்தும் சடலமாய் மரித்துக் கிடந்த
வினாடிகள் அவர்களுக்கு
தெரியாது...
இன்னும்;
அவளுக்கென்ன???
எழுதித் தள்ளுகின்றாள்
என்கின்றார்கள்...
வலிகள் வரிகளாகி மீதம்
இருக்கும் வாழ்விற்கு வழிகளாகி
இருப்பது அவர்களுக்குத்
தெரியவே தெரியாது....
✍️ பாத்திமா ஹகீமா அமீனுதீன்
ஓட்டமாவடி
No comments