ஆதி மனிதனின் ஆதரவும் நவீன மனிதனின் அலட்சியமும்
‘உலக வரலாற்றில் மனிதன் நாகரீகம் அடைந்ததற்கான முதல் அறிகுறி எது?’ என மானுடவியலாளர் மார்கரெட் மீட்டை (Margaret Mead) ஒரு மாணவர் கேட்கிறார். மனிதன் நெருப்பைக் கண்டறிந்ததையோ சக்கரத்தை உருவாக்கியதையோ அவர் பதிலாகச் சொல்லவில்லை.
தொடை எலும்பு முறிந்து முதன்முதலில் குணமானதையே மனிதன் பண்பட்டதற்கான அடையாளமாகக் குறிப்பிடுகிறார். இப்பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மீட் மேலும் விளக்குகிறார். விலங்குகளின் உலகில் கால் எலும்பு முறிந்துவிட்டால் அது செத்துவிடும்.
ஆபத்திலிருந்து அதனால் தப்பிக்க முடியாது, வேட்டையாட இயலாது, நீர்நிலைகளைத் தேடியலைந்து தாகம் தணிக்க முடியாது. உடைந்த எலும்பு சீராவதற்கு நீண்டகாலமாகும் என்பதால் மற்ற விலங்குகளும் அதனைக் கைவிட்டுவிடும். அடிபட்ட உயிரினம் பிற வேட்டை மிருகங்களுக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், ஆதிமனிதனின் தொடை எலும்பு முறிந்து குணமானதற்கான தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. அவனது எலும்பு சரியாகிப் பிழைத்திருக்கிறான் எனில் அவனுடன் யாராவது தங்கியிருந்து பணிவிடைகள் செய்திருக்க வேண்டும்.
அடர்காடுகளிலும் மலைகளிலும் நடமாட முடியாத அவனைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்து காப்பாற்றிப் பாதுகாத்திருக்க வேண்டும். அவனுக்கான உணவையும் சேகரித்து வந்து நோயுற்ற காலம் முழுவதும் அன்புடன் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.
ஒருவர் துயருறும் காலம் முழுக்க உடனிருந்து உதவி செய்த போதே மனித நாகரீகம் பிறந்திருக்கிறது. நாம் பிறருக்குச் சேவை செய்யும்போதே உன்னதமானவர்கள் ஆகிறோம். மனிதனாக நடந்துகொள்கிறோம்.
No comments