Breaking News

காதல் உயிரையும் வென்றது!!!!


 

      சூரிய அன்னையானவள் தன்னொளி கொண்டு உலகையே ஆக்கிரமிக்கும் தருணம் அது....

          பட்சிகளின் கீச்சிடும் ஒலிகளுடன் இயந்திர உலகு இயங்க ஆரம்பிக்கின்றது...

இவ் விடியலின் வருகை கண்ட பக்கத்து வீட்டு ராணி அக்காவின் சேவலின் கூவல் ஒலி கேட்டு ஆயிஷா விழித்துக் கொள்கிறாள் அப்போது கடிகார முட்களோ மணி ஐந்தை தாண்டி இருந்தது...

       கண்களை பிசைந்தவளாய் கடிகார முகம் நோக்கிய ஆயிஷா அவசர அவசரமாக எழுந்து சென்று இறைவனை தொழுது காலைக் கடன்களை முடித்தவாறு தந்தை ஹகீமின் படுக்கையறைக்குச் சென்றவாறு மெதுவாக குரல் கொடுக்கின்றாள்...


       வாப்பா... வாப்பா... சுபஹூ ஹலாவாஹ போகுது சீக்கிரம் எந்திறங்க....

       மகள் ஆயிஷாவின் மென்மையான குரலோசையில் கண் விழித்த ஹகீம் அல்லாஹு அக்பர் எனக் கூறியவாறே கட்டிலில் இருந்து எழும்பி உட்கார்ந்த வண்ணமே ...மகள் ஆயிஷாவின் வதனம் நோக்க ஆயிஷாவோ....

         

            "வாப்பா இண்டக்கி உம்மா மவுத்தாகி இரண்டு வருஷமாகுது உம்மாட பேர்ல யாசீன் ஒண்டு ஓதி கதிய்யா செஞ்சிறுங்க"....

       என தந்தை ஹகீமுடன் பேச்சை தொடுத்தவாறே ஹகீமின் அறையை விட்டு ஆயிஷா வெளியேறுகிறாள்...


       மகள் ஆயிஷா தன் அறையை விட்டு வெளியேறும் வரை ஆயிஷாவையே பார்த்த வண்ணம் இருந்த ஹகீமின் நினைவுகள் கடந்த காலத்தை சுற்றிச் சுழன்றன....


     ஹகீமின் மனைவி பஸீனா மாரடைப்பால்  உயிருக்காக போராடிய வண்ணம் மரணத் தருவாயில் இருந்த போது ....

        "என்னங்க நான் இன்னும் கொஞ்ச  நாளேக்கி தான் உயிரோட இருக்கப் போறேன்னோன்னு தோணுது என் விதி என்ட உம்மாவும் வாப்பாவும் சிறிசிலேயே என்ன தனியே உட்டுட்டு போய் நான் அனாதையாகிட்டன் எனக்கன்னு உங்களயும் மக ஆயிஷாவையும் தவிற வேறு யாருமில்ல அத விடுங்க அந்த கவல ஒன்னும் பெரிசில்லங்க ஆனா எங்க மவ ஆயிஷாட நெலமய நெனச்சாத்தான் கவலயா கிடக்கு ...பிறக்கும் போதே அவளுடைய ஒரு சிறுநீரகம் புற்று நோயால் செயலிழந்து விட்டது மற்றைய சிறு நீரகமும் புற்று நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சீக்கிரம் செயலிழந்துமண்டு டாக்டர் சொல்லி இருக்காங்க ஆயிஷா உசிர கையில புடிச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கா இந்த நெலமேல நானும் அவழ தனியே உட்டுட்டு அல்லாஹ்ட்ட பொப்பறன் அவள ... அவள.... கடைசி வரைக்கும்"...

      என பஸீனா ஏதோ சொல்ல தடுமாறிய போது விதி அவளை மேலும் பேச விடவில்லை...

         பஸீனா இவ் உலகில் இருந்து விடை பெற்றாள்...


     வாப்பா.... வாப்பா....

என்ற ஆயிஷாவின் குரல் கேட்டு கடந்த காலத்தில் இருந்து மீண்டு தன்னிலை அடைந்தார் ஹகீம்..

       "வாப்பா எந்திறிங்கப்பா சீக்கிரம் தொழுது போட்டு வாங்க  கோபி ஊத்திட்டன் ஆரிர போகுது"...

         இதோ எழும்பிட்டன் மா என்றவாறே எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு சுபஹ் தொழுது விட்டு யாசீன் ஓதிக் கொண்டிருந்த போது ....

           "வாப்பா இந்த கோபிய குடிங்க எனக்கு ஆபிஸூக்கு போக டய்ம் ஆச்சு கிச்சன்ல இடியப்பம் அவிச்சி வச்சிருக்கன் சூடார முன்ன சாப்ட்ருங்க "...

     என்றவாறே ஆயிஷா தன் தந்தையிடம் இருந்து விடை பெற்று ஆபீஸ் நோக்கி கிளம்பினாள் ...


         சரியாக பத்து நிமிடத்தில் ஆபீஸை அடைந்த  ஆயிஷா தனது கைக் கடிகாரத்தை பார்த்த வண்ணம் விரைவாக ஆபீஸின் உள் நோக்கி நகரவே...

       "ஆயிஷு ஆயிஷு நில்லுங்க".....

என்ற குரல் கேட்டு தன் நடையின் வேகத்தை கட்டுப்படுத்திய ஆயிஷா குரல் வந்த திசையை நோக்கி திரும்பவே ஆயிஷாவின் முகத்தை ஏக்கத்துடன் நோக்கியவனாய் அமீர் நின்றிருந்தான்....


       அமீரும் ஆயிஷாவும் ஒரே ஆபிஸில் வேலை செய்பவர்கள் அமீர் ஆயிஷாவின் மேல் தீராத காதல் கொண்டு இரண்டு வருடங்களாய் ஆயிஷாவின் பின்னால் சுற்றித் திரிகின்றான் எனினும் அமீரின் காதலை ஆயிஷா ஏற்றுக் கொள்ளவில்லை அதற்கு காரணம் ஆயிஷாவிற்கு அமீரின் மீது பிரியமில்லை என்பதல்ல மாறாக ஒற்றைச் சிறுநீரகத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஆயிஷாவின் பரிதாப நிலையே அமீரின் காதலை ஆயிஷா ஏற்க மறுத்ததற்கு காரணமாய் இருந்தது என்றாலும் அமீரிடம் ஆயிஷா அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...

        பலமுறை அமீரின் காதலை ஆயிஷா மறுப்பதற்கான காரணத்தை அமீர் ஆயிஷாவிடம் வினவிய போதும் ஆயிஷாவிடமிருந்து எவ்வித வார்த்தைகளும் வெளிப்படவில்லை...

          இந் நிலையில் பொறுமை இழந்த அமீர் ஆயிஷா வீட்டில் இல்லாத நேரமொன்றில் ஆயிஷாவின் தந்தை ஹகீமிடம் தான் ஆயிஷாவை உயிராய் நேசிப்பதை தெரிவித்த போது ...

        "மவன் எங்க மவ ஆயிஷாவிற்கு கலியாணம் பண்ணி வைக்கிற நெலமேல நாம இல்ல மன்னிச்சிக் கொங்க" என ஆயிஷாவின் தந்தை ஹகீமும் தன் காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததை எண்ணி கண்ணீர் வடித்தாலும் ஆயிஷாவே என் வாழ்கை துணை என்பதில் உறுதியாக இருந்தான் ஆயிஷாவின் தந்தையும் அமீரின் காதலை மறுத்ததற்கும் ஆயிஷாவின் பரிதாப நிலையே காரணமாய் இருந்தது....


       மீண்டும்...ஆயிஷா என்ற அழைப்புடனே தன் வதனம் நோக்கி இருந்த அமீரிடம் ...

     "அமீர் நாநா ப்ளீஸ்...எத்தனயோ தரம் சொல்லிட்டன் என் பின்னால வராதீங்க நான் கலியாணம் முடிக்கிற மனநிலேல இல்ல புரிஞ்சிக் கொங்க என்ன டிஸ்டப் பண்ணாதீங்க வேற ஒரு நல்ல பெண்ணா பாத்து நல்லா வாழ்ற வழிய பாருங்க"...

       என ஆயிஷா அமீரிடம் கூறிய போது ஆயிஷாவின் கண்கள் குளமாகியதை அமீர் கவனிக்கத் தவறவில்லை...

        இவ்வாறு அமீரிடம் கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர முற்பட்ட ஆயிஷாவை ....

       "ஆயிஷா ஒரு நிமிஷம் நில்லுங்க ...என்ற அமீரின் குரல் தடுத்து நிறுத்தியதுடன் ....

      "ஆயிஷா எத்தன வருஷம் போனாலும் உங்க மீதான என் காதல் உயிர் வாழும் என் மேல உங்களுக்கு பிரியமில்லாம இல்ல வேறேதோ காரணம் தான் என் காதல உங்களுக்கு ஏத்துக் கொள்ள விடாமல் இருக்கு அந் நெலம வெகு சீக்கிரம் மாறும் என்ட நம்பிக்க எனக்கு இருக்கு ஆயிஷா".... 

        என்றவாறு அமீரின் பேச்சு நீளவே எதையும் காதில் வாங்கிக் கொள்ளதவளாய் முன்னோக்கிச் சென்ற ஆயிஷாவின் உடம்பில் ஏதோ மாறுதல் உண்டானது போன்ற உணர்வு அவளை ஆட்கொள்ளவே ஆபிஸின் உள்ளே சென்று விடுமுறைக்கான கடிதத்தை சமர்பித்து விட்டு ஆபீஸில் இருந்து விடுமுறை பெற்று வீடு திரும்பினாள்...

         ஆயிஷா வீட்டை வந்தடைந்ததும் ஆயிஷாவின் எதிர்பாராத வருகையை கண்ட ஹகீம் ....

      "ஆயிஷா என்னம்மா ஆபீஸ் போகல்லயா" என வினவவே....

        தந்தையின் கேள்விகளுக்கு பதில் கூற முட்பட்ட ஆயிஷா தலையை பிடித்த வண்ணம் கீழே சரிந்தாள் ....

  

         இந் நிலையை கண்ட ஆயிஷாவின் தந்தை அதிர்ச்சியடைந்தவராய் ஆயிஷாவை அவசர அவசரமாக எடுத்துச் சென்று மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்த போது ஆயிஷாவை பரிசோதித்த வைத்தியர் ....

         ஆயிஷாவின் எஞ்சி இருந்த ஒற்றைச் சிறுநீரகமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டதாகவும் சிறுநீரக மாற்றீடு மேற்கொண்டால் மட்டுமே அவள் உயிர் பிழைக்க வாய்புள்ளதாகவும் ஆயிஷாவின் தந்தையிடம் கூறிய போது....

        "டாக்டர் என்  சிறுநீரகங்களில் ஒன்றை அகற்றி அதை என் மவளுக்கு மாற்றீடு செய்து விடுங்கள் என் மனைவியும் என்ன விட்டு போயிட்டா என் மவ ஆயிஷாவும் என்ன விட்டுப் போன நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்" என ஆயிஷாவின் தந்தை கண்ணீர் சிந்தவே அக் கதறலை கேட்ட வைத்தியர் ...

        "இல்லேங்க அது சாத்தியப் படாது அது வயசுல சின்னப் பொன்னு அவவுக்கு அவுட வயச அண்மித்த ஒருவரின் சிறுநீரகம் தான் பொருந்தும் எனக் கூறி விட்டார்....

        வைத்தியரின் இம் மறுப்பை ஏற்க மறுத்த ஆயிஷாவின் தந்தையின் உள்ளம் கனக்கவே  ....

        "என்ட அல்லாஹ்வே எனக்கேன் இவ்வளோ சோதன என் மவள என்கிட்ட இருந்து பிரித்து விடாதோ ரஹ்மானே" என இறைவனை நோக்கி புலம்பிய வண்ணம் ஆயிஷாவின் தந்தை ஹகீம் நின்றிருக்கவே ....

     "அன்கல்... அன்கல்...

 என்று தன் பின்னால் இருந்து வந்த  ஒலி கேட்டு ஹகீம் பின்னால் திரும்பி பார்த்த போது அமீர் நின்றிருந்தான்....


          "அன்கல் என்ட ஆயிஷா எங்க என்ட ஆயிஷாவ நான் பாக்கனும் ....." என்ற அமீரின் கதறலை கேட்ட ஆயிஷாவின் தந்தை ஹகீம் ....

         மவன் அது வந்த... அது வந்து.... என கண்ணீர் தேங்கிய முகத்துடன் அமீரின் வதனம் நோக்கவே ....


        "அன்கல் எல்லா உண்மைகளும் தெரிந்திரிச்சு ஏன் இவ்ளோ நாள் என்கிட்ட இத மறச்சீங்க இப்போதான் புரியுது ஆயிஷா என் காதல ஒப்புக் கொள்ளாததுக்கு இது தான் காரணமென்டு ... என்ன சுயநலவாதி என்டு நெனச்சீட்டீங்களா  ஆயிஷாட உண்ம நெல தெரிஞ்சா நான் அவள விட்டு தூரமாகிறுவேன்னு நெனச்சீங்களா...அது கனவுளேம் நடக்காது இப்பேம் சொல்றன் ஆயிஷா என்னோட மனைவி தான் நாம ஒன்னா வாழத்தான் போறோம் ....அன்கல் தைரியமா இருங்க டாக்டர் கிட்ட நான் பேசிட்டன் எனது உடல் நிலைய டாக்டர்ஸ் டெஸ்ட் பண்ணி பாத்தாங்க என் இரு சிறுநீரகங்கல்ல ஒன்ட  ஆயிஷாவிற்கு மாற்றீடு செய்தால் ஆயிஷா உயிர் பிழைக்க முடியும் என்டு சொல்லிட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஒப்ரேசன் நடக்க போகுது துஆ செய்ங்க அன்கல்.." என்றவாறே அமீர் வைத்தியரின் அறைக்குச் செல்ல முற்பட்ட போது.....


         "மவன் கொஞ்சம் பொறுமயா யோசிச்சு முடிவெடுங்க கொஞ்சம் நில்லுங்க...." என ஆயிஷாவின் தந்தை அமீரிடம் கூறவே அமீர் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் வைத்திய அறை நோக்கிச் சென்றான்....


        சிறுநீரக மாற்றீட்டுக்கான சத்திர சிகிச்சை ஏற்பாடுகளும் ஆரம்பமாகின வெற்றிகரமாய் அமீரின் சிறுநீரகங்களில் ஒன்று ஆயிஷாவிற்கு பொறுத்தப்பட்டது ....

        இருவரும் மயக்க நிலையில் இருந்து தன்னிலைக்கு இன்னும் திரும்பவில்லை சத்திர சிகிச்சையறைக்கு வெளியே நன்றியுணர்வோடு ஆயிஷாவின் தந்தை ஹகீம் நின்றிருக்கின்றார்....

        காதல் உயிரையும் வென்றது!!!!!

          முற்றும்....


✍🏻:எச் பாஸியா இம்தியாஸ்...

பேருவளை

No comments