Breaking News

திரைக்குப் பின்னால் அவள் எனும் பெண்...

 


இக்காலத்தில் பெண் என்றாலே ஆடவர்கள் மத்தியில் போதைப்பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்களின் கண்ணோட்டத்தில் பெண் என்றால் அவளால் எதுவும் சாதிக்க முடியாத ஒரு மென்மையான சதைப்பிண்டம். ஆண்துணையற்று தனித்து நின்று போராட முடியாதவள் என்று மென்மை சார்ந்து ஒப்புவமைக்கப் படுகிறார்கள். 

வீட்டு எல்லைக்கோடுகளுக்குள் அடங்கியிருப்பவள். ஆண்களின் தேவைகளுக்காகவும் ஆசைகளுக்காகவும் ஒரு இனம்தெரியாத சூன்ய பகுதிக்குள் அடங்கி அடிமையாய் இருப்பவள். தலைமைத்துவத்திற்கு  உரித்துடையவளல்ல. பொழுது போக்குப் பாவை இவ்வாறான பலவீனமுடையவர்களாகவே கருதப்படுகிறார்கள். சிறு வயது தொடக்கம் இவ்வாறானதொரு மூடநம்பிக்கையை தன்னுடைய பிள்ளைகளுக்கு கற்பித்து வருகிறார்கள். கல்வி என்பது பெண் பிள்ளைகளுக்கு பொறுத்தமற்றது. அவ்வாறு படித்துவிட்டால் கூட உயர்தர கல்வி அவளுக்கு பொறுத்தமற்றது. தற்போது மகளுக்கு 25வயதாகி விட்டது இனி கற்றல் அவளுக்கு பொருத்தமில்லை. திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ஊர் உலகம் தப்பாய் பேசும் இவ்வாறு சில பெற்றார்கள் கூறுவதுண்டு. 

ஊர் உலகமல்ல உங்கள் பிள்ளையின் எதிர்கால வாழ்க்கைக்கான சுவடுகள். அதை உணர்ந்து கொள்ளட்டும் ஒவ்வொரு பெற்றோரும். அனைத்து சொந்தங்களும் சொத்துக்களும் என்றும் நிலையானதில்லை.ஆனால் அப்பிள்ளைகள் கற்ற கல்வி என்றுமே நிலையானது.எச்சந்தர்ப்பத்திலும் கைநழுகவிடாது பாதுகாத்துக்கொள்ளும். அது போக இன்று திருமணம் என்ற பெயரில் அவர்களின் கரங்களுக்கு விலங்கிட்டு வைக்கிறார்கள்.எதுவும் அவளால் சுதந்திரமாக செய்வதற்கு உரிமை இல்லை. அவ்வாறு செயற்பட்டு விட்டால் அவளின் நடத்தைகளை கொச்சப்படுத்துதல். திருமணம் என்பது சிறைச்சாலை ஆகிவிடுவதுண்டு ஒருசில பெண்களுக்கு.அத்தியவசிய தேவைகளுக்காக பாதையில் செல்ல முடியவில்லை தனித்து ஒரு பெண்ணால்.அவளிற்கு ஆயிரம் வார்த்தைகள் குறையாமல் குற்றச்சாட்டுகள். திருமணம் ஆனதும் அவளின் சொந்தங்கள் சுமையாவதுண்டு ஒருசில ஆண்களுக்கு. தன் குடும்ப உறவுகளை மாத்திரம் மதித்து மரியாதை கொடுத்து வழிநடத்தும் அவர்கள் தன் மனைவியின் சொந்தங்களும் தன்னுடைய உறவே என்பதை உணர்ந்து வாழ்வதில்லை. கணவனுக்கும் தன் குடும்பத்திற்கும் இடையில் சிக்குண்டு தவிக்கும் அவளின் பரிதாபமோ அளப்பரியது. இன்னும் அவள் எப்பெரிய கல்வி கற்றால் கூட அவளின் கனவுகளை அடைய வழியின்றி வதங்கிக் கொண்டிருக்கிறாள். நாள்முழுவதும் பிள்ளைகள் குடும்பமென வாழும் அவளால் தன்னுடைய கனவுகளை நோக்கி செல்ல தடையாகவே உள்ளார்கள் ஆண்கள்.

இதையும் கடந்து அவள் செல்லும் பாதையில் படுகுழிகள் பலதும் பதுக்கிய வண்ணமிருக்கிறது. இதற்கான தீர்வு அவளை அடக்கி ஆளுவதுதான் என்றும் பல ஆண்கள் படையெடுப்பதுமுண்டு.பெண்தானே இவள் என்றும் பலர் மத்தியில் ஏளனமாய் அவள்.


பெண்தானே என்று ஏளனமாய் கூறிவிட்டு நகரும் அவர்களுக்கு தெரிவதில்லை பெண்ணின் அவலநிலை.ஒவ்வொரு பெண்ணுள்ளும் ஒவ்வொரு விதமான ரணங்கள் புதைந்து கிடக்கின்றன. அவளின் உணர்வுகளை கட்டிப்போட்டு களிப்பில் வாழும் வாழ்க்கையைக் அறிவார்களா அது பெண்தானே என்று அவலத்தை தந்திரமாக அவள்மீது திணித்தவர்கள். எத்தனையோ பெண்கள் உளவியல் ரீதியாக தாக்கமுற்று வாழ்கின்றனர். தனிமையில் இன்னும் எத்தனையோ பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் வாழ்வதற்காக. அதிகமாக தன் குடும்ப நலனுக்காகவே பெண்கள் இன்று கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியவில்லை அக்கணம் பெண்தானே என்று கூறியவர்கள். அவள் பிறப்பு முதல் இறப்பு வரை ஏராளமான ஏக்கங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றாள். அவ்வாறான நிலையில் கூட அவளால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

 ஆண்கள் தான் அவள் உணர்வு அறியாமல் அவளை கொன்று திணிக்கின்றனர் என்று பார்த்தால் அவ்வாறு ஒருபுறம் இருக்க மறுபுறம் அவளாகவே நிலை கொண்ட அவளின் இனமும் மனதில் சிறிதளவும் ஈரமில்லாது  வசைபாடுகின்றனர். அதிலும் அவள் சற்று குறைகளுடன் இருப்பின் அதுவே அவர்களின் நிறையென எண்ணுகிறார்கள்.பூப்பெய்ந்த நாளிலிருந்து நாடமுடியவில்லை பாதையில் காரணம் ஆணாதிக்கம். பட்டம் பெற்று பணிபுரிய முடியவில்லை பணிபுரியும் இடத்தில் ஏலமிட்ட வண்ணம் வணிகர்கள். இதுபோக திருமண வயதை எட்டியதும் வீட்டாரின் தொல்லை முடிவில்லாது. சரி திருமணம் முடிந்துவிட்டது எண்ணி மன அமைதி பெற முன்னே வந்து நிக்கிறது மகப்பேறு எனும் தொல்லை. உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை விதவிதமான பேச்சுக்கள் காதை மூடிக்கொள்ளுமளவிற்கு. இதுவும் கடந்து செல்லும் பாதையில் இடையிலே சாபமொன்று கைகாட்டியது


அதற்கப்பால் சென்று பார்த்தால் கணவனை இழந்து அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்.இவர்களை கண்டால் ஆண்களுள் ஒருசிலர் நினைப்பது இழிவாக. எதற்காகவும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்பவள் காரணம் அவளோ கணவனற்று வாழ்பவள் கைகொடுக்க யாருமற்ற அநாதையவள்.அகதியாய் வாழ்பவள் ஆக தான் சிலகாலம் அவளை அடைகாத்துக்கொள்ளலாம் என்றொரு இழிவான மனப்பான்மை.அவர்களின் எண்ணம் இவளால் தனித்து வாழ்வது கடினம்.

 ஆண்துணை இன்றி இவளால் எதையும் சாதிக்க இயலாது இவ்வாறு மனதில் பதித்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த மனப்பான்மையுடன் மண்ணில் வாழும் மனிதர்களை மாற்றியமைக்க ஒவ்வொரு பெண்ணும் முன்வரவேண்டும். காலா காலமாக கதைகள் பல தொடுத்து வரும் தொய்வாளர்களையும் தொலைத்து எரியும் அளவில் பெண் முன்னேற வேண்டும்.முன்போலல்லாது தற்போதைய நவீன யுகத்தில் தடைகள் பல தாண்டி தளைத்து நிற்க ஒவ்வொரு பெண்ணுள்ளமும் உறுதுணையாய் திகழ வேண்டும். பெண்ணிய கோட்பாடுகள் பல இன்று பெண்ணுரிமை பற்றி பேசினாலும் பல பெண்களுக்கோ முன்வந்து செயல்பட தைரியமின்றி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். 

தன்னை ஓர் ஆண் ஏமாற்றிப் சென்றால்.வாழ்க்கை முற்றுப்பெற்று விட்டது என்றெண்ணி அழுது புலம்புவதை விட்டு தான் உயர்ந்து ஏராளமான சாதனைகள் புரிந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் பெற்று தன்னை கைகழுவிச் சென்ற ஆண்ணிற்கு பாடம் புகட்ட வேண்டும். தன்னை இழிவாக கருதியவர்கள் முன்னிலையில் தகுந்த முறையில் தடம்பதிக்க வேண்டும் என்றான எண்ணம் மட்டும் எழுமானால் பெண்ணான உன்னை வீழ்த்த எவராலும் முடியாது. 

தான் எத்தனை தடங்களை தாண்டியாவது தழைத்து நிற்கும் மனவலிமையை தன்னுள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். பெண் என்பவள் ஆண்களை விட மனவலிமை உடையவள் தெரியுமா? எப்பேர்ப்பட்ட பிரசவ வலியைகூட சகித்துக் கொள்ளும் அவளால் முடியவில்லையா தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள? இன்றிலிருந்து இத்திரைக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கும் மாயவிம்பத்தினை உடைத்து வெளியே வர வேண்டும் பெண் என்னும் பெருங்கதைக்குச் சொந்தக்காரியான பேரரசிகள் அனைவரும்....


✍️ அன்ஷியா

No comments