சிந்தனைக்கு சில நிமிடம்...
நண்பா திறமைகள் என்பது அனைவரிடமும் நிறைந்து உள்ளது. ஆனால் அதை செயல்படுத்தும் விதங்களில் தான் உனக்கான இடம் வெற்றியா தோல்வியா? என்று அமைகிறது.
வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஒலித்துக் கொண்டிருந்தாலே தோல்விகள் எல்லாம் தவிடு பொடியாக மாறிவிடும்.
இந்த உலகத்தில் வல்லவனாக யாரும் பிறந்ததில்லை. தன்னம்பிக்கை என்ற சுடர் தீபம் உனக்குள் எரிந்து கொண்டிருந்தால் இந்த அகிலத்தையே உன் கைகளுக்குள் அடைக்கலாம்
வெற்றி என்னும் மைல்கல்லை அடைய துணை செய்யும் மிக சிறந்த ஆயுதமே நம்பிக்கை. அதை மட்டும் வளர்த்துக் கொள்ள உன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதை முடியாது என்று ஒரு மனது சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் இன்னொரு மனது இதுவெல்லாம் உனக்கு சுஜிபி மேட்டர் இதை ஈசியாக முடித்து விடலாம் என்று சொல்லும். ஆனால் நாம் முடியாது என்று சொல்வதை கேட்டு மனம் தளர்ந்து போய்விடுவோம். அப்படி மட்டும் தளர்ந்து போய் விடவே கூடாது. நமக்கு வெளியே மட்டுமல்ல மனதிற்குள்ளே கூட பல நேரங்களில் போராட்டங்கள் வரும் அதை போராடி வெற்றி பெற வேண்டும்.
நாம் தோற்றுப் போக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். நம்மை தோற்கடிப்பதற்காக பல வழிகளிலும் சூழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். பல நேரங்களில் நாம் வீழ்ந்து விடும் நேரங்களில் எல்லாம் அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் அதை துளி அளவும் மூளையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். என்னதான் நீங்கள் கொண்டாடினாலும் என்னுடைய வெற்றி வெகு விரைவில் என்ற ஒரு நம்பிக்கை மட்டும் நம்முடைய மனதிற்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நம்மை வெறுப்பவர்கள் முன்பே நம்முடைய வெற்றியால் தான் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் அந்த எண்ணம் மட்டும் நம்முடைய மனதை விட்டு போய்விடவே கூடாது.
எந்த வேலையை நாம் செய்து கொண்டிருந்தாலும் அதை இன்றே செய்து முடித்து விட வேண்டும். நாளை செய்து கொள்ளலாம் நாளை மறுநாள் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பது நல்ல வீரனுக்கு அழகே கிடையாது. இதை பல இடங்களில் பலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நம்முடைய நிஜ வாழ்க்கையில் இதை நம்முடைய மூளையில் ஆழமாக பதிய வைத்து விட வேண்டும். எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை உடனே செய்து விட வேண்டும். நாளை ஒரு வேலையை செய்யலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டால் அது மேலும் உங்களுக்கு சுமையை தான் கொடுக்கும்.
எல்லா நேரங்களிலும் வெற்றி கிடைக்காமல் போய்விடலாம் ஆனால் அந்த வெற்றி நம்மை விட்டு போனாலும் நமக்கு ஒரு அனுபவத்தை கொடுத்து விட்டு தான் போயிருக்கும். அந்த அனுபவத்தை வைத்து இழந்த வெற்றியை பல மடங்காக எப்படி மீண்டும் பெறுவது என்பதில்தான் நம்முடைய கவனம் இருக்க வேண்டும். ஐயோ இது கிடைக்காமல் போய்விட்டதே இப்படி ஆகிவிட்டது என்று நான் நினைத்து வருந்தினால் நம்முடைய முன்னேற்றமும் தடைப்பட்டுவிடும். அதனால் கிடைக்காத வெற்றியும் நம்முடைய சிறந்த அனுபவமாக பயன்படுத்தி வெற்றியை தட்டி பறித்து விட வேண்டும்.
VS. SivaA
/L Biology
Jaffna Hindu College
No comments