உழ்ஹிய்யா விடயத்தில் மிக்க பொறுப்புடன் செயற்படுவோம்.
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
இப்ராஹீம் (அலை) , தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக பலியிடத் துணிந்த தியாகத்தை நினைவூட்டும் “உழ்ஹிய்யா”.
உழ்ஹிய்யா என்பது புனித ஹஜ் பெருநாள் தினத்திலும் அதைத் தொடர்ந்துவரும் துல்ஹஜ் மாதம் 11,12,13 ஆகிய தினங்களிலும் வசதியுள்ள ஒரு முஸ்லிம் நிறைவேற்றும் மிகச் சிறந்த வணக்கமே உழ்ஹிய்யா (குர்பான்) கொடுப்பதாகும். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களை அறுத்து தானும் உண்டு பிறருக்கும் புசிக்கக் கொடுத்து அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நற்செயலே உழ்ஹிய்யா ஆகும்.
உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுகையில் பிற சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாழ்படுத்தாத வகையில் அதை நிறைவேற்றுவது முக்கிய அம்சமாகும் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. நம் மதக் கிரியைகளை நிறைவேற்றும் போது மாற்று மதத்தினரின் அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்வது நல்லதல்ல.
அல்லாஹ்வின் கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு, எத்தனையோ காலங்களாக “இல்லையே தமக்கொரு பிள்ளை” என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக பலியிடத் துணிந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் உயர்வான, ஒப்பற்ற மனதையும், ஒரு மாபெரும் தத்துவத்தையும் தியாகத்தையும் எமக்கு உழ்ஹிய்யா (குர்பான்) நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.
ஸகாத் கொடுப்பவர்கள்தான் உழ்ஹிய்யா கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வசதியுள்ளவர்கள் அனைவரும் கொடுக்க வேண்டும். ஒட்டகம் அல்லது மாடாக இருந்தால் ஏழு பேர் சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இது ஆண்களுக்கு மட்டும்தான் என்பதில்லை. பெண்களும் தாராளமாக இதில் பங்கேற்கலாம். உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது மிகவும் சிறந்தது. அப்படி இல்லையென்றால் வேறொருவருக்குப் பொறுப்புக் கொடுக்கவும் முடியும். அவர் அந்த இடத்திற்கு சமூகமளிப்பது சிறந்தது. தைரியமிருந்தால் பெண்களும் அறுக்கலாம். அறுப்பதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட வேண்டும். நாம் அறுக்கின்ற போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூற வேண்டும்.
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கின்ற நிலையில் துல்ஹஜ் மாதம் பிறந்ததும் நகம், முடி எதையும் வெட்ட வேண்டாம்” (முஸ்லிம்). ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கும் நிலையில் நகம் அல்லது முடி ஏதாவது ஒன்றை வெட்டினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.
மிருகங்களை அறுப்பதற்கும் இறைச்சியைப் பெற்றுகொண்டு சுற்றாடலுக்கு மாசு ஏற்படாதவகையில் கழிவுப்பொருட்களை அழித்தொழிப்பதற்கும் போதிய இடவசதி இருக்கும்வரை இந்த நடைமுறையில் பிரச்சினைகள் தலைதூக்குவதில்லை. பல்லின மக்களும் கலந்து வாழும், இடப்பற்றாக்குறை நெருக்கடி மிக்க பகுதிகளில் மிருகங்களை அறுப்பதும், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எப்போதுமே சர்ச்சைக்குரியனவாகின்றன.
அல்லாஹ் படைத்த எந்த மிருகத்தையும் (ஆகுமாக்கப்பட்டதை) அறுத்து உண்பதில் எந்தத் தவறும் கிடையாது. உழ்ஹிய்யா கொடுக்கும் விடயத்தில் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் மாற்று மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மிருகங்களை அறுப்பதற்காக கொண்டுசெல்லும் போது அதற்கு இம்சை செய்வதோ, அறுத்ததன் பின் இரத்தம் வடியும் நிலையில் பாதைகளில் இறைச்சியைத் தூக்கிச் செல்வதோ கூடாது. அறுத்த பிராணியின் கழிவுகளான தோல், எலும்புகள், கொம்பு, சாணம் போன்றவற்றை துர்நாற்றம் வீசும் நிலையில் பாதையோரங்களில் வீசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவைகளை குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும். ஆனால் நம் சகோதரர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிடுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாக உள்ளது. இது போன்ற தவறுகளை விடுவதால்தான் மாற்று சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதை உழ்ஹிய்யா கொடுக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது கட்டாயக் கடமையாகும்.
எமது நாட்டின் இறைச்சிக் கடைகள் தொடர்பான உள்ளூராட்சி அமைப்புகளுக்கான கட்டளைச் சட்டம் அமுலில் உள்ளதோடு அதன் பிரகாரம் இறைச்சியின் பொருட்டு கால்நடைகளைக் கொல்வதற்குப் பாதுகாப்பான கொள்கலன்களிலேயே அறுக்கப்பட வேண்டும் என்ற நியதியும் உண்டு. உழ்ஹிய்யாவின் பொருட்டு மிருகங்களை அறுப்பதற்காக அவ்வப் பிரதேச உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் பேசி, அதற்காக செலுத்த வேண்டிய சிறு கட்டணங்களையும் செலுத்தி, பாதுகாப்பான முறையில், சுற்றாடலுக்கும் சுற்றாடலிலுள்ள மாற்று சமூகத்தவர்களுக்கும் தொந்தரவில்லாதவாறு இக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் இன்னும் ஒருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும்.
எமது நாட்டில் உழ்ஹிய்யா சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியாகவும் மன சந்தோஷத்துடனும் உழ்ஹிய்யா கொடுக்கும் நிலைமை ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!
கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.
No comments