Breaking News

அரசாங்கத்திடம் பிரச்சினைகளை முன்வைப்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று

இன்று மக்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதென்பது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் விசனம் தெரிவித்துள்ளார்.

இன்று முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. மக்கள் வாழ்வாதார பிரச்சினை முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். அன்றாட தேவைகளுக்கான உணவு பண்டங்களை பெறுவது, அவசர மருத்துவ வசதிகளை பெறுவது, வழமையான மருத்துவ சோதனைகள் மற்றும் மருந்து பொருட்களை பெறுவதென அனைத்துமே சிக்கலான நிலையில் உள்ளது. ஆனால், இன்று மக்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதென்பது செவிடன் காதில் ஊதும் சங்கு போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விவசாயிகள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் முதல், மரக்கறி மற்றும் பல்வேறு பழவகைகளை பயிரிடுபவர்கள் என சகலரும் நற்றாற்றில் விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் தமது விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ள சந்தை வசதியின்றி தவிக்கின்றனர். மறுபுறம் தமது பயிர்களுக்கு தேவையான உரம், கிருமி நாசினிகள் இன்றி தவிக்கின்றனர். தமது கண்முன்னே, தமது விலை பொருட்கள் அழிந்து போவதும், பயிர்கள் அழிந்து போவதையும் பார்த்து விவசாயிகள் துடிதுடித்து போய் நிற்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் அரசு கண்டும் காணாதது போல் செயற்பட்டு வருகின்றது.

கடல் தொழிலாளர்களின் நிலையும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கொழும்பு மற்றும் நீர்கொழும்பை அண்டிய பிரதேசங்களில் கடல்தொழிலில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பது புரியாத புதிராக உள்ளது. கடலில் என்னென்ன நச்சு பொருட்கள் கலந்திருக்கின்றதென்றோ, இனி என்னென்ன கலக்கப்போகின்றதென்றோ, அதன் விளைவுகள் என்ன என்றோ தெரியவில்லை. தமது தொழிலை இழந்துள்ள இக்கடற்தொழிலாளர்களுக்கும் இந்த அரசாங்கத்திடம் எந்த தீர்வையும் காண முடியவில்லை.

மறுபுறமாக, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலை இவையனைத்தையும் விட மோசமான நிலையில் உள்ளது. 1000 ரூபா என்பதை முன்னாள் காட்டி முழு தோட்ட தொழிலாளர்களும் பழிவாங்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல தோட்டங்களில் வழமையாக வழங்கப்படும் வேலை வழங்கப்படுவதில்லை. பயணத்தடையுள்ள இந்நேரத்தில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டில்லை. இன்று ஆதரவற்ற நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் பிரச்சினைகள் துளிர்விட்டு எரிகின்றது. மக்கள் வேதனையில் நலிவடைந்துள்ளனர். தமது பிரச்சினைகளை அதிகாரிகளுக்கு கூறி பயனில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு கூறி பயனில்லை. ஊடகங்களில் வந்து சொல்லியும் பயனில்லை. எனவே யாரிடம் தான் மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பது?

No comments