Breaking News

இலங்கையை பூர்விகமாக கொண்ட 9 வயது மர்யம் ஜெஸீம், ஐக்கிய ராஜ்ஜியத்தின் அதி சிறந்த அல்குர்ஆன் காரியாஹ் வாக மகுடம் சூட்டப்பட்டார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சணல் டீவி " கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான "அல் குர்ஆன் கிராஅத் போட்டி " நிகழ்ச்சி தொடரில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய ராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக "
மகுடம் சூட்டப்பட்டார். அல் ஹம்துலில்லாஹ்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரபலமான இப்போட்டி நிகழ்ச்சியில் 6-14வயதுடைய
நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர் .

ஒவ்வொரு சுற்றும் இறுதி சுற்றை நெறுங்கும் தருவாயில் கடினமான நிபந்தனைகளை கொண்டிருந்தது . இறுதி சுற்றுக்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே தெரிவாவர்.

இறுதி சுற்றுக்கு தெரிவாகும் போட்டியாளர்கள் போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் வழங்கும் இரண்டு ஜூசுக்களை மனனம் செய்வதுடன் அச் சூராக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்க வேண்டும் . அத்துடன் நடுவர்களால் வழங்கப்படும் தஜ்வீத் கேள்விகளுக்கும் பதில் வழங்க வேண்டும். இந் நிபந்தனைகளுடன் போட்டியாளர்களின் திறமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டு போட்டியாளர்கள் நடுவார்களால் புள்ளிகள் வழங்கப்படுவர் .

மர்யம்ஜெஸீம் முதல் தடவையாக கலந்து கொண்டு பல சுற்றுக்களில் நடை பெற்ற பலப் பரீட்சைகளில் வென்று இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இறுதி சுற்றுப் போட்டியில் 3 திறமை மிகு சக போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது .

மர்யம் ஜெஸீம் , இறுதி சுற்றில் நடுவார்களால் வேண்டப்பட்ட ஜூஸ் உக்குறிய சூரா நபாவை எவ்வித தஜ்வீத் பிழைகளுமின்றி இனிய ராகத்துடன் ஓதி அதற்கான மொழிபெயர்ப்பை சரியாக வழங்கியதுடன் , நடுவார்களால் வினவப்பட்ட அத்தனை தஜ்வீத் வினாக்களுக்கும் சரியான பதில்களை அளித்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் 2021 ஆம் ஆண்டின் அதி சிறந்த அல் குர் ஆன் காரியாஹ் வாக ( அல் குர்ஆன் ஒதுனராக) என்ற மகுடத்தை வென்றார் . அல்ஹம்துலில்லாஹ். 

இறுதி சுற்றில் கலந்து கொண்டிருந்த அஸ் ஷெய்க் சுஐப் அலி அவர்கள் மர்யம் ஜெஸீம் இவ் வெற்றி மகுடத்தை பெற தகுதியான குறிப்புக்களை கூறுகையில் , "தன்னால் வேண்டப்பட்ட சூராவை அழகிய ராகத்துடன் எவ்வித தஜ்வீத் பிழைகளோ , அரபு எழுத்துக்களின் உச்சரிப்புகளில் பிழைகளோ இன்றி ஓதி காண்பித்தததுடன் மொழிபெயர்ப்பில் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தி இருந்ததுடன் , வினவப்பட்ட அத்தனை தஜ்வீத் வினாக்களுக்கும் தெளிவான பதிலை அளித்திருந்தார் " என குறிப்பிட்டு இருந்தார் .

ஒன்பது வயதுடைய மர்யம் ஜெஸீம் இங்கிலாந்தின் இஸ்லாம் சணல் தொலைக்காட்சி வழங்கும் இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்விகமாக கொண்ட முதலாவது சிறுமியாகவும் திகழ்கிறார் .

சிறுவயதில் இருந்து சர்வதேச அல் குர் ஆன் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வரும் இவர் , கடந்த ரமழானில் இங்கிலாந்தில் ஈமான் டீவி நடாத்திய தேசிய ரீதியிலான "ஜூஸ் அம்மாஹ் ". அல் குர்ஆன் மனன போட்டியில் கலந்து கொண்டு ஜூஸ் அம்மாஹ் 2020 வெற்றியாளர் பட்டத்தை வென்று முதல் பரிசான இரண்டு இலவச உம்ராஹ் பயண டிக்கட்டை பெற்றுக் கொண்டதுடன் சர்வதேச புகழ் பெற்ற சன்மார்க்க போதகரான முப்தி மென்க் அவர்களின்பிரத்தியேக பாராட்டையும் பெற்றுக் கொண்டார் .

இங்கிலாந்து மற்றும் எகிப்தில் உள்ள இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் தொடர்ச்சியாக அழைப்பு ஓதுனராக பங்கு கொண்டு தஜ்வீத் முறைப்படி ,அழகிய முறையில் அல்குர்ஆன் ஓதி பாராட்டுக்களை பெற்று வரும் மர்யம் ஜெஸீம் தனது யூ டிட்யூப் தளம் (www.youtube.com/maryamjazeem) மூலம் நாளாந்தம், இளம் மற்றும் முதியோரை கவரும் வண்ணம் பல்வேறு படைப்புக்களை வழங்கி வருகிறார் . அத்துடன் மைமூன் அல் குர் ஆன் தளத்தில் சிறுவர்களுக்கான அல்குர்ஆன் மற்றும் தப்சீர் ஆசிரியராகவும் பங்களிப்பு செய்து வருகிறார் .

பன்முக ஆளுமை மற்றும் ஆற்றல்களை கொண்ட சிறுமியாக திகழும் மர்யம் ஜெஸீம் , சந்தர்ப்பங்களை சூசகமாக பயன்படுத்தி தனது பூர்விக மண்ணில் நடக்கும் அநீதிகளுக்கும் இளம் வயதிலிருந்தே குரல் கொடுத்தும் வருகிறார். இலங்கையில் நடைபெற்ற ஜனாஸா எரிப்புக்கு எதிராக இங்கிலாந்து ஊடகத்தில் வழங்கிய உணர்வு பூர்வமான அழைப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்தும் இருந்தது .
அத்துடன் , ஐரோப்பிய ஒன்றியத்தின் விலகல் சம்பந்தமான தனது ஆதங்கத்தை தெரிவித்து எழுதிய கடிதம் மூலம் இங்கிலாந்து பிரதமரின் விசேட பதில் அறிக்கையையும் பாராட்டையும் பெற்றவராவார் .

மர்யம் ஜெஸீம் தனது எதிர்காலத்தில் அல் குர்ஆனை மனனமிட்டு ஹாபிழாவாக பரிணமிக்க முயற்சி எடுத்து வருகிறார் . இலங்கையில் கிழக்கு மண்ணில் உள்ள சாய்ந்த மருதை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்த மர்யம் ஜெஸீம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் அதிகமாக தனது தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டு பல சாதனைகளை புரிந்து பிறந்த நாட்டுக்கும் , தனது பூர்விக மண்ணுக்கும் புகழ் சேர்த்து வரும் பன்முக ஆளுமை கொண்ட மர்யம் ஜெஸீம் அவர்களை ஸ்கை தமிழ் சார்பாகவும் வாழ்த்தி பிரார்த்திக்கிறோம்.

No comments